எங்கே இருக்கிறாய்
என் தோழா போஸ்.
நம் நாட்டின்மீது
மறுமுறை போர்ப்படை
அமைக்க வேண்டும்..
மறுபடியொரு
யாத்திரை போகவேண்டும்
ஆனால்,
காந்திகூட
ஹிம்சைவழி மாறும்
கொள்கையில்!
அஹிம்சை பொறுத்து
சுதந்திரம் அளித்திட
ஆள்பவன் ஆங்கிலேயன் அல்ல...
என்னுடன் வந்தவன்
ஏறி நின்றதும்
எட்டி உதைக்கிறான்.
செங்கோல் நிறம்
மங்கிவிட்டதென
ரத்தம் கேட்கிறான்.
பதவி ஏறிட பாதபூஜைக்கு
தண்ணீர் அல்ல
கண்ணீர் வேணுமாம்.
காலில் விழுந்தாலும்
கஜானா காலியென
பல்லவி பாடுகிறான்.
என்ன செய்வதென்றே
தெரியாமல் எல்லாம்
செய்கிறான்.
கொள்கை என்று சொல்லியே
குரளி வித்தை
காட்டுகிறான்.
நல்ல விலை
கிடைக்கிறதென்று
நாட்டையே கூறுபோடுகிறான்.
போதுமடா பனிமலையில்
பாதைகாத்து நின்றது.
நீ காக்கும் நாட்டை
அபலமாக்கிட
அரியணையேறி விட்டனர்.
இல்லை!!
அரியணையேற்றிவிட்டோம்.
மீண்டும் ஓர்
படையெடுப்போம்.
களையெடுத்து
களைமீட்டு
புதுநாடு படைக்கவேண்டும்! எங்கே இருக்கிறாய்
என் தோழா போஸ்.
Comentarios